ரஜினியுடன் ஏற்பட்ட நட்பு நிரந்தரமானது!
நன்றி :- http://sagalakalavallavan.blogspot.com/2008/08/blog-post_07.html
"ரஜினிக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு, ஆழமானது; நிரந்தரமானது'' என்று கமலஹாசன் குறிப்பிட்டார்.
கமல் கதாநாயகனாக நடித்த "அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினி ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இருவரும் 15 படங்களில் சேர்ந்து நடித்தனர்.
அந்தப் படங்கள் வருமாறு:- (1) அபூர்வ ராகங்கள், (2) மூன்று முடிச்சு, (3) அவர்கள், (4) 16 வயதினிலே, (5) ஆடுபுலிஆட்டம், (6) இளமை ஊஞ்சலாடுகிறது, (7) அவள் அப்படித்தான், (8) அலாவுதீனும் அற்புத விளக்கும், (9) நினைத்தாலே இனிக்கும், (10) தப்புத்தாளங்கள், (11) தில்லுமுல்லு, (12) நட்சத்திரம், (13) தாயில்லாமல் நானில்லை, (14) சரணம் ஐயப்பா, (15) உருவங்கள் மாறலாம்.
இருவருக்குமே தனித்தனியாகப் பெரிய ரசிகர் கூட்டம் சேர்ந்தது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பது, இருவர் முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு இருவருமே வந்தனர். அதனால் இருவருமே சேர்ந்து, பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார்கள். "இனி நாங்கள் தனித்தனியாகவே நடிப்போம். சேர்ந்து நடிக்கமாட்டோம்'' என்று அறிவித்தார்கள்.
இது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாக அமைந்தது. கமலும், ரஜினியும் தனித்தனியே பல வெற்றிப்படங்களை கொடுத்தனர். கமலஹாசன் "உலக நாயகன்'' என்றும் "கலைஞானி'' என்றும் புகழ் பெற்றார். ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்'' என்று போற்றப்படுகிறார்.
தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக எம்.கே.தியாகராஜ பாகவதர் திகழ்ந்தபோது, இரண்டாவது சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் பி.யு.சின்னப்பா. இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. இருவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. யார் சிறந்த நடிகர் என்பதில், ரசிகர்கள் மோதிக்கொள்வதுண்டு.
"பாகவதரைப்போல சின்னப்பாவால் பாட முடியுமா?'' என்று பாகவதர் ரசிகர்கள் கேட்பார்கள். "சின்னப்பாவைப்போல பாகவதரால் நடிக்க முடியுமா?'' என்று சின்னப்பா ரசிகர்கள் கேட்பார்கள். ரசிகர்கள்தான் இப்படி மோதிக் கொள்வார்கள் என்றாலும், பாகவதரும் சின்னப்பாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.
பிறகு எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சூப்பர் ஸ்டார் ஆனார்கள். இருவரும் நாடகங்களில் நடித்து வந்தபோதே, வறுமையை பங்கிட்டுக்கொண்டு, அண்ணன்-தம்பி பாசத்துடன் பழகியவர்கள். சினிமாவில் புகழ் பெற்ற பிறகும், இந்தக் குடும்பப் பாசம் தொடர்ந்தது. இருவரும் "கூண்டுக்கிளி'' என்ற ஒரே படத்தில் நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. தனித்தனி பாணியில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள். "இருவரில் யார் வசூல் சக்ரவர்த்தி'' என்பது குறித்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். மதுரையில், ரசிகர்களின் ஆவேசம் கத்திக்குத்து வரை போனது உண்டு. ஆனால் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கடைசிவரை அண்ணன் - தம்பியாகவே பழகினார்கள்.
இன்று உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் கமலுக்கும், ரஜினிக்கும் தொழில் போட்டி இருந்தாலும், பொறாமை கிடையாது. "உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?'' என்று ரஜினியிடம் கேட்டபோது, "கமலஹாசன்'' என்று ரஜினி கூறியிருக்கிறார். கமல், தான் நடிக்கும் படங்கள் முடிவடைந்தபின் ரஜினிக்கு போட்டுக் காட்டுவார். இதேபோல் ரஜினி தன் படங்களை கமலுக்கு திரையிட்டுக் காண்பிப்பார்.
ரஜினியுடன் உள்ள நட்பு பற்றி ஒரு பேட்டியில் கமல் கூறியிருப்பதாவது:-
"எனக்கு ராஜன் என்கிற நண்பர் இருந்தார். 28 வயதிலேயே அவருக்கு கேன்சர். மரணத்தின் நிழல் அவர் மீது விழ ஆரம்பித்த நேரம்.
ஒருநாள் என்னுடன் ஷூட்டிங் ("அபூர்வ ராகங்கள்'') பார்க்க வந்தார். மேக்கப் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது, சரேலென கதவைத் திறந்து கொண்டு ரஜினி உள்ளே நுழைந்தார். "குட்மார்னிங் கமல் சார்'' என்று `விஷ்' பண்ணிவிட்டு, படு ஸ்டைலாக மின்னல் மாதிரி நடந்து போனார்.
ராஜனும், ஏறக்குறைய ரஜினி மாதிரி இருப்பார்! "கமல்! இது யாரு? என்னை மாதிரியே இருக்கிறாரே!'' என்று கேட்டார், ராஜன். "இவர் பெயர் சிவாஜிராவ்! புதுசா நடிக்க வந்திருக்கிறார்!'' என்றேன். இது நடந்து 3 மாதங்களில் என் இனிய நண்பர் ராஜன் இறந்து போனார். அன்று முதல் ரஜினிதான் எனக்கு ராஜன்! அதாவது ஆப்த நண்பர்.
என்றைக்கு அவர் (ரஜினி) மேக்கப் அறையின் கதவைத் திறந்து வேகமாக உள்ளே வந்தாரோ, அன்றே என் மனக்கதவையும் திறந்து உள்ளே நுழைந்து விட்டார்!''
இவ்வாறு கூறிய கமல், இன்னொரு கட்டுரையில் ரஜினி பற்றி கூறியிருப்பதாவது:-
"நானும் ரஜினியும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தோம். நல்ல நல்ல படங்கள் செய்தோம். "நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் போயிருந்தபோது, டைரக்டருக்குத் தெரியாமல், இரவெல்லாம் ஊர் சுற்றி, திரிந்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு திருட்டுத்தனமாய் பூனை மாதிரி ஓட்டலுக்குள் ஓடி ஒளிவோம். மறுநாள் ஷூட்டிங் நேரத்தில் தூக்கம் ஆளைத் தூக்கி சாப்பிடும். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்கி வழிவோம்.
ரஜினியும், நானும் நண்பர்களாக இருந்தாலும், எதிர் எதிர் துருவங்கள்தான். கடவுள் நம்பிக்கையில், வாழ்க்கை முறையில், நடிக்கிற படங்களில், தேர்ந்தெடுக்கப்படுகிற கதைகளில், பொழுதுபோக்குகளில் என, நானும் ரஜினியும் அப்படியே வெவ்வேறு ரசனைகளும், விருப்பங்களும் கொண்டவர்கள்.
அதுபற்றிப் பேசும்போது, இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வந்ததுண்டு. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. அது, நாங்கள் செய்யும் தொழிலான சினிமா பற்றிய பயம்!
ரஜினி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், "இதுதான் நமது முதல் படம்'' என்கிற பயபக்தியுடன் கவனம் எடுத்துச் செய்வார். நானோ, "இதுதான் நான் செய்கிற கடைசிப்படம்'' என்கிற வெறியுடனும், வேகத்துடனும் உழைப்பேன். எங்களிடையே ஏற்பட்ட அன்பு, எப்போதும் அப்படியே இருக்கிறது. எங்களுக்குள் ஈகோ எதுவும் கிடையாது.''
மேற்கண்டவாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.
(நன்றி : தினத்தந்தி)
Thursday, August 7, 2008
ரஜினியுடன் ஏற்பட்ட நட்பு நிரந்தரமானது!
Posted by Unknown at 8:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment